Sunday, October 31, 2010

மொழிப்பயிற்சி-10: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-

மொழிப்பயிற்சி-10: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

First Published : 10 Oct 2010 03:49:59 PM IST

சொற்றொடர் அமைப்பு:​​
பத்​தி​ரிகையாளரும்,​​ வானொலி,​​ தொலைக்காட்சி ஊடகத்தாரும் பள்ளி ​ ஆசிரியர்களும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று சொற்றொடர் ​(வாக்கியம்)​ அமைப்பு.​ முக்கியமாக ஒருமை பன்மை மயக்கம் சொற்றொடர்களில் இருத்தல் ஆகாது.​ ஆங்கிலத்தில் ஒருமை பன்மை மயங்க எழுதினால் ஏளனம் செய்கிறோம்.​ இடித்துரைக்கிறோம்.​ தமிழில் மிகத் தாராளமாக இப்பிழையைப் பலரும் செய்கிறார்கள்.
​ 1.​ பிரேசில் நாட்டில் பெரும்பாலான இடங்கள்​ வெள்​ளத்​தால் சூழப்பட்டுள்ளது.​ ​(ஒரு செய்​தித்​தா​ளில்)​
​ 2.பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலைகள்​ தெரி​விக்​கப்​பட்டது.​
இடங்​கள் என்​னும் பன்​மைச் சொல்​லுக்​கேற்​பச் சூழப்​பட்​டுள்​ளன என்​றும்,​​ கவ​லை​கள் என்​னும் சொல்​லுக்​கேற்ப தெரிவிக்கப்பட்டன என்றும் முடிக்க வேண்டும் என்று அறியாதவர்களா?​ அல்லது அக்கறையின்மையா?
​ 1.ஒவ்வொரு சிலையும் வண்ண வண்ணமாக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.​ ​(ஒரு தொலைக்காட்சி செய்தி)
​ 2.இந்த மன்றத்தின் செயற்பாடு ஒவ்வொன்றும் பாராட்டிற்குரியன ​(ஒரு சிற்றிதழில்)
ஒவ்வொரு சிலையும் எனும் ஒருமைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,​​ செயற்பாடு ஒவ்வொன்றும் எனும் ஒருமைக்கேற்ப பாராட்டிற்குரியது என்று முடித்தல் வேண்டும்.​ இந்த நுட்பமெல்லாம் நம்மவர் சிந்திப்பதில்லை.
'அர்' எனும் பலர்பால் விகுதி கொண்டு முடிய வேண்டிய வாக்கியங்களைச் செய்தி படிப்பவர் சிலர் முழுமையாகப் படிக்காமல் அஃறிணைப் பன்மை கொண்டு முடிக்கிறார்கள்.​ இது ஒரு பாணி போலும்.
​ 1.விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தன.​ ​(ர்)​
​ 2.​ பலநாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருந்தன.​ ​(ர்)​ முடி​வில் உள்ள 'ர்' ஒலியை விழுங்கிவிடுகிறார்கள்.​ கேட்கும் நம் செவியில் அச் செய்தி தேளாய்க் கொட்டுகிறது.
ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளார்:​ ''ஓய்வாக இருக்க முடியாத நிலையில் ஏதாவது​ வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள்''.​ இந்த வாக்கியத்தில் ஏதாவது என்பது ஒருமை,​​ வேலைகள் என்பது பன்மை.​ ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று எழுத வேண்டும்.
சொற்றொடர் அமைப்பில் கருத்துப் பிறழ உணருமாறு நேர்ந்துவிடக் கூடாது.​ ஒரு நூல் மதிப்புரையில் ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்:​ ''மனுதர்ம சாஸ்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டுள்ளவர்க்கும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்''
''மனுதர்ம சாத்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் -​ அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும்'' என்று இருந்தால் இச்சொற்றொடர் சரியானதாகும்.​ மதிப்புரை செய்துள்ளவரின் கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.​ எழுதப்பட்டுள்ளபடி 'தவறான எண்ணம் கொண்டவர்க்கும்
இந்நூல் பயன்படும்' என்பது தவறான கருத்தன்றோ?
ஒரு விழா பற்றி அறிவிப்பாளர் சொல்லுகிறார்:
''இன்றைய விழா சரியாக மாலை ஆறு மணியளவில்​ நடை​பெ​றும்.'' இத்​தொ​ட​ரில் பிழையுள்ளதா?​ உள்ளது.​ எப்படி?​ சரியாக என்று சொன்னால் ஆறு மணி அளவில் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?​ சரியாக ஆறுமணிக்கு என்றோ ஆறு மணியளவில் என்றோ ​ சொல்லுதலே சரியாகும்.​ சரியாக என்று சொல்லிவிட்டு ஏறத்தாழ ​(அளவில்)​ என்பது முரணன்றோ?
ஒரு கூட்டத்தில் பேச்சாளர் பேச்சைத் தொடங்குகிறார்:
''இங்கு கூடியுள்ள அனைவர்க்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' அதென்ன?​ வணக்கத்தில் முதற்கண் வணக்கம்,​​ இடைக்கண் வணக்கம்,​​ இறுதிக் கண் வணக்கம் என்றெல்லாம் உண்டா?​ என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் வாக்கியம் சரியான பொருளில் அமையும்.​ வணக்கத்தை ஏன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்?​ அனைவர்க்கும் வணக்கம் என்றோ,​​ அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் என்றோ தொடங்கினால் அழகாக இருக்குமே.
(தமிழ் வளரும்)

No comments:

Post a Comment