Sunday, October 31, 2010

மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-

மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்!

First Published : 19 Sep 2010 12:09:25 PM IST

வல்லெழுத்து மிகா இடங்கள்
1.​ அது,​​ இது,​​ எது ​ முன் மிகாது.
(எ-டு)​ அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?
2.​ அவை,​​ இவை,​​ எவை ​ முன் மிகாது.
(எ-டு)அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?
3.​ அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?
(எ-டு)​ அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?
4.​ ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.
(எ-டு)​ ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.
5.​ பல,​​ சில முன் மிகாது.
(எ-டு)​ பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.
6.​ உகர ஈற்று ​ வினையெச்சங்கள் முன் மிகாது.
(எ-டு)​ வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.
7.​ அத்தனை,​​ இத்தனை முன் மிகாது.
(எ-டு)​ அத்தனை குரங்குகள்,​​ இத்தனை பசுக்களா?
குறிப்பு:​ அத்துணை முன் மிகும்.
(எ-டு)​ அத்துணைப் பெயர்களா?​ இத்துணைச் சிறப்பா?
8.​ பெயரெச்சம் முன் மிகாது.
(எ-டு)​ ஓடாத குதிரை,​​ வந்த பையன்,​​ பறந்த புறா
குறிப்பு:​ ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு)​ ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ
9.​ என்று,​​ வந்து,​​ கண்டு முன் மிகாது.
(எ-டு)​ என்று சொன்னார்,​​ வந்து சென்றார்,​​ கண்டு பேசினார்.
வல்லொற்று மிகுமிடங்கள்,​​ மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை.​ சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.​ இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமை உருபுகள் ​(2 முதல் 7 முடிய)​ விரிந்து ​(வெளிப்படையாக)​ இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.​ நூலைக் கற்றான் -​ இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.​ உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.​ பால் பருகினான் -​ இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.
ஒரு வினைச் சொல் நிற்க,​​ ​ அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச் சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.​ ​(எ-டு)​ வந்து ​(முற்றுப் ​ பெறாத வினை)​ நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.​ இதுபோல் முற்றுப் பெறாத வினை,​​ ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.​ வந்த ​(முற்றுப் பெறாத வினை)​ பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது.​ இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து ​(வினையின் கடைசி எழுத்து)​ இல்லாமற் போயிருந்தால் ​(கெட்டிருந்தால்)​ அது ஈறு கெட்ட பெயரெச்சம்;​ அதுவே எதிர்மறைப் பொருளும் ​(இல்லை என்பது)​ தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
(எ-டு)​ உலவாத் தென்றல் -​ உலவாத தென்றல் என்பதில் "த்' என்னும் ஈற்றெழுத்துக் கெட்டு ​(இல்லாமற் போய்)​ உலவா என நின்று "த்' வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று.​ தென்றல் உலவும் ​(அசையும்)​ இது உலவாத ​(அசையாத)​ என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.
ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை.​ பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும்.​ "மை' விகுதியும் கெட்டிருக்கும்.​ ​(எ-டு)​ செந்தாமரை-​ இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.​ இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.​ ​(எ-டு)​ வட்டக்கல் -​ வட்டமாகிய கல்.​ கல்லே வட்டம்.​ வட்டமே கல்.
(தமிழ் வளரும்)

No comments:

Post a Comment